என் மேகம் ???

Wednesday, March 7, 2012

பயணங்கள்

வாழ்க்கை என்ற பயணத்தில் தான் எத்தனை அனுபவங்கள். சற்றும் குறைந்ததல்ல ஊர்ப் பயண அனுபவங்கள். சிறு வயதில் பெரும்பாலும் பேருந்து பயணங்கள் தான். சன்னலை ஒட்டி அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே தூங்கி வழிந்தால் ஊர் வருவதே தெரியாது. சிறு வயதில் இரயில் பயணங்கள் கம்மிதான். என்றாலும் உடன் வருபவர்களுடன் உரையாடல்களுக்கு பஞ்சமிராது. கை முறுக்கு, புளி சாதம் என்று எல்லாமும் பகிர்ந்து பயணம் சுகமாக இருக்கும். இதெல்லாம் இப்பொழுது மயக்க பிஸ்கட் பயத்தில் போனவைதான். யாரோ சிலர் செய்யும் தவறால் யார்மீதும் நம்பிக்கை இன்றி போய்விட்டது.


கிட்ட‌த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் முத‌ல் விமான‌ப் ப‌ய‌ண‌ம். ஆஸ்திரேலியாவிற்கு செல்ல சிங்க‌ப்பூர் வ‌ழி ப‌ய‌ண‌ம். சிங்க‌ப்பூர் இற‌ங்கும்பொழுதே இளைப்பு சேர்ந்து கொண்ட‌து. கைப்பையை சும‌க்க‌ முடியாத‌ அள‌வு இளைத்த‌து. சொல்லாம‌லே உதவினார் கேர‌ளாவைச் சேர்ந்த‌ ஒருவ‌ர். முன்பின் தெரியாத‌வ‌ரிட‌ம் ந‌ன்றி கூறி தொலைபேசி எண் ப‌கிர்ந்து கொண்டேன். அடுத்த‌ வார‌மே சிட்னியில் யாரையோ காண‌ வ‌ந்த‌வ‌ர், அவ‌ர்க‌ள் ஊரில் இல்லை என்று தொட‌ர்பு கொண்டார், நானும் க‌ண‌வ‌ரும் அழைத்து வ‌ந்து ஓர் இர‌வு த‌ங்க‌ வைத்து வ‌ழி அனுப்பினோம். இப்ப‌டி முன் பின் தெரியாத‌வ‌ருட‌ன் இன்று தொலைபேசி எண் கொடுப்பேனா என்று யோசித்தால் இல்லை என்று தான் தோன்றுகிற‌து.


ச‌மீப‌த்தில் இர‌யிலில் சென்று கொண்டிருந்தோம். சுட்டி குழ‌ந்தை ஒன்று பேச்சுக்கு இழுத்த‌து. குழ‌ந்தைக‌ள் சுட்டியாக‌ இல்லாவிட்டால் இன்றைய ப‌ய‌ண‌ங்க‌ளும் சுவார‌சிய‌மின்றிதான் இருக்கும். சொந்த‌ ஊர் ஒன்றாக‌ இருக்க‌ அம்மாக்க‌ளிடையே பேச்சு துவ‌ங்கிய‌து. எந்த‌ தெரு என்று துவ‌ங்கிய‌ பேச்சில்...சிறு வ‌யதில் ஓடி விளையாடிய‌ ஒருவரின் உற‌வு என்று புரிந்த‌து. அத‌ன் பின் சில‌ க‌தைக‌ள் என்று சுவார‌சிய‌மான‌து ப‌ய‌ண‌ம். பேச‌ வைத்த‌ சுட்டிக்கு தான் ந‌ன்றி சொல்ல‌ வேண்டும்.


தற்பொழுது பய‌ண‌த்தை சுவார‌சிய‌மாக்கும் உரையாடல்க‌ள் குறைந்துவிட்ட எத‌ன் மீதும் ந‌ம்பிக்கை அற்ற நிலையை என்னென்ப‌து?

5 comments:

ஹுஸைனம்மா said...

உண்மைதான், அவநம்பிக்கை ஒரு பக்கம் என்றால், எல்லார் கையிலும் இருக்கும் மொபைல் ஃபோனும் (லேப்டாப், எம்பி3 ப்ளேயெர் இன்னபிற) இன்னொரு காரணம். வேற துணை எதற்கு?

தமிழ் அமுதன் said...

எங்கோ யாரோ செய்யும் தவறுகள்தான் காரணம்..!

ராமலக்ஷ்மி said...

/இப்பொழுது மயக்க பிஸ்கட் பயத்தில் போனவைதான். /

உண்மைதான் அமுதா:(! இறுதியில் கேட்டிருப்பது எல்லோரது மனதிலும் இருக்கிற ஆதங்கமே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குழ‌ந்தைக‌ள் சுட்டியாக‌ இல்லாவிட்டால் இன்றைய ப‌ய‌ண‌ங்க‌ளும் சுவார‌சிய‌மின்றிதான் இருக்கும். //ஆமா.. அவர்களால் தான் நாங்க இன்னமும் ரெண்டுநாள் பயணப்பட்டு ஊருக்குப்போய்ட்டு வந்துட்டிருக்கோம்...

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_18.html